சோழன் :- “தஞ்சைக்கு வருவதாக சொன்ன நண்பர்கள் இன்னும் வரவில்லையே?”
சேரன் :-
“இதோ வந்து விட்டோம் நண்பரே!”
பாண்டியன்
:- “உங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் நாட்டினையும் பார்த்து விட்டு
வரலாமே என்ற எண்ணம்தான்”.
சேரன்
:- “இப்போதுதான்
எல்லாம் இணைக்கப்பட்டு ஒரே தமிழ்நாடாகி விட்டதே”.
சோழன்
:- “வாருங்கள்
வாருங்கள், அப்படியே நகர்உலா சென்று விட்டு
வரலாமே!”
பாண்டியன்
:- “ஆம்,
நாம் யாரென்பதையும் அங்ஙனமே மக்களுக்கு சொல்லி விடலாம்!”
சேரன் :-
“நான்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். எனது
தந்தை உதியஞ்சேரல். தாய் வெளியன் வேள் என்பவனின் மகள். எனது ஆட்சிக்காலம் சங்க கால
ஆட்சியாகும். நான் 58 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறேன். என்னைப் பற்றி குமட்டூர்க்
கண்ணனார் என்பவர் பதிற்றுப் பத்து என்னும் நூலில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
சோழன் :-
“அடடா!
அருமை”
சேரன் :- நான் இமையத்தில் எம் வில்
சின்னத்தைப் பொறித்தவன். ஆரியர்களை அடிபணியச் செய்தவன். நாட்டில் புரட்சி செய்த
யவனர்களையும் அடக்கியவன்.
பாண்டியன் :- “பலே! பலே!”. என் பெயர் கூன் பாண்டியன்.
சேரன் :-
“என்ன கூன் பாண்டியனா?”
பாண்டியன் :-
ஆனால் எனக்கு சுந்தரப் பாண்டியன்
என்னும் வேறு பெயரும் உண்டு.
சோழன் :- “என்னிடம் நின்றசீர் நெடுமாறன் என்று
சொன்னீர்களே!
பாண்டியன் :- “ஆமாம், ஆமாம். என் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள். நான் மதுரை
மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல்
முறை தவறாமல் அரசாண்டு வந்தேன். என் மனைவி மங்கையர்க்கரசி ஆவாள்.
சோழன் :-
யார்?
சைவ மதத்தைப் பரவச் செய்த மங்கையர்க்கரசி அம்மையாரா?
பாண்டியன் :-
“ஆமாம். நான் என் வினையின் காரணமாக
கூன் கொண்டிருந்தேன். மேலும் சில சமணப் பெரியோரின் பேச்சினைக் கேட்டு என்
ஆட்சியில் சமணம் தழைக்கச் செய்தேன். இதைப் பொறுக்காத என் மனைவி எனக்குத் தெரியாமல்
நால் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவர்கள் மதுரைக்கு வரச் செய்தாள்.
அப்போது அவரைக் கொல்ல சமணர்கள் அவரிருந்த இடத்திற்கு தீ வைத்தனர்.
அத்தீ அவரை ஒன்றும் செய்யாது. எங்களைத் தான் படுத்தியது.
சோழன் :-
“அடடா..
பின்பு என்னவாயிற்று?”
பாண்டியன் :-
“திருஞான சம்பந்தர்தான் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, எனக்கு திருநீறு தடவி, என்நோயை மறையச் செய்தார். நோயோடு
எனது நெடுநாள் இருந்த கூனும் மறைந்தது.. அன்று முதல் எனக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது. நான் சைவ
சமயத்தின் பெருமைகளை உணர்ந்தேன் அதிலிருந்து சிவத்தொண்டில் ஈடுபட்டேன்.”
சேரன் :-
“ஆஹா.. கேட்கும் போதே
மெய் சிலிர்க்கிறது. தங்களைப் பற்றிக் கூறலாமே”
சோழன் :-
“நான்தான்
விஜயாலயச் சோழன். பிற்காலச் சோழர்களின் ஆட்சி என்று நீங்கள் பெருமைப்படும் இராஜராஜன்
மற்றும் இராஜேந்திரச் சோழர்களின் பொற்கால ஆட்சிக்கு வித்திட்டவன்.
சேரன் :-
“அப்படியா?”
சோழன் :-
“ஆம்.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு என் ஆட்சியைத் தொடங்கினேன். பின்பு திருப்புறம்பியப்போரில்
பாண்டியர்களைத் தோற்கடித்து, தஞ்சாவூரைக்
கைப்பற்றினேன். எனக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்தே முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு
வந்தான்.
பாண்டியன் :- “போர்க்களத்தில் பகைவர்களாகவே சந்தித்த
நாம் இன்று நண்பர்களாக சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.”
சேரன் :-
“ஆமாம். வாருங்கள்.
நகர்வலம் செல்வோம்.”
சோழன் :-
“எப்படி
ஒரு மாற்றம் இது? இத்தனை புதிய கண்டுபிடிப்புகள்..
அப்பப்பா?”
பாண்டியன் :-
“ஆமாம்.. இருந்தும் மக்கள் அத்துணை மகிழ்ச்சியாக இருப்பது போல தெரியவில்லையே.
சேரன் :-
“ஆம். நம்முடைய ஆட்சிக்குப்
பின் வந்த ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டு இருந்தார்கள் அல்லவா?
பாண்டியன் :-
“அவர்களிடம் இருந்து விடுதலை பெற்று, மீண்டு வரும் போதே நமது செல்வங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டனர்.”
சேரன் :-
“இப்போதிருக்கும் நிலையை
அடைய நம் மக்கள் பட்ட பாட்டினை சொல்லி மாளாது.”
சோழன் :-
“இப்போது
மக்களாட்சி நடைபெறுகிறது. நம் மக்களைப் பிரிக்க மதம்,
சாதி, இனம் என எத்துணை வந்தாலும் தமிழ் என்னும்
தெய்வமொழி நம்மை இணைக்கும். திண்ணமாக பொற்கால வாழ்வு முறையை மீண்டும் நம் மக்கள் அடைந்தே
தீர்வர்”
பாண்டியன்:-
“அதிலென்ன ஐயம்?
சரி சரி.. நாம் வானுலகம் செல்ல வேண்டிய நேரம் வந்தாகி விட்டது. வாருங்கள்
செல்வோம்”.
எல்லோரும்:- “ஆமாம். ஆமாம்”..
